'ஜன நாயகன்' படத்தை லீக் செய்த விவகாரம்... கைதான 6 பேர் யார்? - சைபர் க்ரைம் கொடுத்த தகவல்! ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காத நிலையில் படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் அப்படத்தின் முழு காட்சிகளும் ஹெச்டி தரத்தில் இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் கடும் அதிர்ச்சியடைந்தது. இச்சம்பவத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 'ஜனநாயகன்' படத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சூழலில் இது தொடர்பாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த 6 பேரும் கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதேபோல் இதுவரை சுமார் 300 விதிமீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சைபர் க்ரைம் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள சைபர் க்ரைம் காவல்துறையினர், ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ பகிரவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறையினர் வழங்கிய தகவலின்படி, படத்தின் முழு காட்சிகள் இணையத்தில் வெளியாவது தொடர்பான விதிமீறல்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சைபர் க்ரைம் காவல்துறையினர் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.#surya #jananayagan #kavin_productions #cyber_crime #rajini_kant
