மைக் முன்னாடி ஆவேசம் காட்டிய சீமானுக்கு என்னாச்சு? தேர்தல் தோல்விக்குப் பின் செய்தியாளர்களுக்கு நோ சொல்லும் நாம் தமிழர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வருகிறார். அண்மைக் காலம் வரை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து ஆவேசமாகப் பேசிய இவர், தேர்தல் தோல்விக்குப் பின் ஊடகங்களைச் சந்திக்காமல் மௌனம் காப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செல்வாக்கை இழந்துள்ளது. குறிப்பாக, சீமானின் முதன்மை வாக்கு வங்கியான இளைஞர்களின் வாக்குகள் இம்முறை சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் பெருமளவில் சாய்ந்துள்ளன. தவெக அலையால் கட்சியின் வாக்கு வங்கி சரிந்தது குறித்து பொதுவெளியில் விளக்கம் கேட்க ஊடகங்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், சீமான் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து ஊடகங்கள் எழுப்பக் காத்திருக்கும் அடுக்கடுக்கான தர்மசங்கடமான கேள்விகளுக்குப் உடனடிப் பதிலளிக்க விரும்பாமல் சீமான் மௌனம் காப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கும் அதிமுக உள்கட்சி விவகாரங்கள் (இபிஎஸ் - சி.வி.சண்முகம் மோதல்) குறித்து செய்தியாளர்கள் எழுப்பக் கூடிய கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்காமல் கடந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒட்டு மொத்த அரசியல் களமும் மாறி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு (NTK) இந்தத் தேர்தல் அதிர்ச்சிகரமான முடிவை அளித்துள்ளது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல், பேரவையில் பூஜ்ஜிய (0) இடங்களுடன் மிகக் கொடூரமான தேர்தல் வாஷ்-அவுட்டைச் சந்தித்துள்ளார்.#chennai #nathak #tamilnadu_legislative_assembly_election_2026 #ntk #tavak
